ஆரம்ப பிரிவு மாணவர்களிற்கான பாடசாலை ஆரம்பமாகியது!

நாட்டில் உள்ள அதிகளவான பாடசாலைகளின் ஆரம்ப பிரிவு மாணவர்களிற்கான கற்பித்தல் செயற்பாடுகள் இன்று  திங்கட்கிழமை (25) தொடக்கம் ஆரம்பமாகியுள்ளன.

மன்னார்

மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் தரம் 1 முதல் 5 வரையிலான ஆரம்ப பிரிவு வகுப்புகள் ஆரம்பமாகி உள்ள நிலையில், அதிகளவான மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளித்துள்ளனர்.

மேலும் பெற்றோருடன் அதிக எண்ணிக்கையான மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளித்துள்ளனர்.

அதிக எண்ணிக்கையான மாணவர்கள் பாடசாலை சீருடையுடனும், சில மாணவர்கள் சாதாரண ஆடையுடனும் பாடசாலைக்கு சமூகமளித்துள்ளனர்.

பாடசாலைக்குச் செல்லும் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்குப் பாடசாலை நுழைவாயிலில் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக மாணவர்களின் உடல் வெப்பம் அளவீடு செய்யப்பட்டுள்ளதோடு, ஏனைய சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளது.

மேலும் வீதி போக்குவரத்து பிரிவு பொலிஸார் பாடசாலைகளுக்கு முன் விசேட கடமையினை முன்னெடுத்து வருகின்றனர்.

திருகோணமலை

திருகோணமலை மாவட்டத்தில் கனிஷ்ட பாடசாலைகள் ஆரம்பமானது.

பாடசாலைகளுக்கு முன்னால் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதுடன், மாணவர்கள் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி மாணவர்கள் பாடசாலைக்கு வருகை சென்றதையும் அவதானிக்க முடிந்தது.

இருந்தபோதிலும் மாணவர்கள் உற்சாகத்துடன் பாடசாலைக்கு சக நண்பர்களுடன் வருகை தந்து வகுப்பறைகளைச் சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதையும் காணக்கூடியதாக உள்ளது.

மலையகம்

மலையகத்திலுள்ள பாடசாலைகளில் தரம் ஒன்று முதல் ஐந்து வரையான மாணவர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி உற்சாகமாகப் பாடசாலைகளுக்கு வருகை தந்தனர்.

மலையக பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள பாடசாலைகள், கடந்த இரு நாட்களாகப் பெற்றோர் மற்றும் பழைய மாணவர்களால் சுத்தம் செய்யப்பட்டன. சில பாடசாலைகள் இன்று காலையே சுத்தம் செய்யப்படுவதைக் காணமுடிந்தது.

சுமார் 100 நாட்களுக்கு மேலாகத் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அதிபர், ஆசிரியர்களும் இன்று பாடசாலைகளுக்கு சமூகமளித்துள்ளனர். சில பாடசாலைகளில் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் வருகை குறைவாகவே காணப்பட்டது.

முகக்கவசம் அணிதல், கை கழுவுதல், சமூக இடைவெளி உட்படச் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு மாணவர்களுக்குப் பாடசாலை நுழைவாயிலில் வைத்தே தெளிவுபடுத்தப்படுவதுடன், மாணவர்களுக்கு நோய் அறிகுறிகள் இருந்தால் அவர்களைப் பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வவுனியா

வவுனியா மாவட்டத்திலுள்ள ஆரம்ப பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் 6 மாதங்களின் பின் ஆரம்பமாகிய போது ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பூங்கொத்து வழங்கி வரவேற்றதுடன் அதிபர், ஆசிரியர்களுக்கும் பூங்கொத்து வழங்கி வரவேற்றுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் பெரும்பாலான பாடசாலைகளில் அதிபர், ஆசிரியர்களின் வரவு அதிகரித்துக் காணப்பட்ட போதிலும் மாணவர்களின் வரவு சற்று குறைவடைந்த நிலையில் காணப்படுகிறது.

சில மாணவர்கள் சீருடை அணியாமல் சாதாரண சீருடையுடனும் பாடசாலைக்கு வருகை தந்திருந்ததை அவதானிக்க முடிந்ததுடன், பாடசாலை வாயிலில் உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.