விடுதலை செய்யப்பட்ட நான்கு அரசியல் கைதிகள் விபரம்!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழே பல வருடங்களாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நான்கு அரசியல் கைதிகளை வவுனியா நீதிமன்றினால் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த நடேசன் தருமராசா, கண்ணதாசன்  வவுனியாவை சேர்ந்த ஜோசப் செபஸ்ரியான், கிளிநொச்சியை சேர்ந்த நடராசா சர்வேஸ்வரன் ஆகியோரோ விடுதலை செய்யப்பட்ட அரசியல் கைதிகளாவர்.

இவர்களில் நடேசன் தருமராசா தனது ஒருவருட புனர்வாழ்வை முடித்து இயல்பு வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த சமயம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கடந்த 2013 ஆம் ஆண்டு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

அவருடன் ஜோசப் செபஸ்ரியான் என்பவரும் கைது செய்யப்பட்டு, இருவருக்கும் கடந்த 2018ம் ஆண்டு வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அந்தவகையில் வழக்கு விசாரணைகளின் அடிப்படையில் அவர்கள் வவுனியா மேல் நீதிமன்றத்தினால் நிரபராதிகள் என இனம் காணப்பட்டதை அடுத்து 8 வருடங்களின் பின்னர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கடந்த 2016 ஆம் ஆண்டு நடராசா சர்வேஸ்வரன் கைது செய்யப்பட்டார். இவருக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றில் கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கு விசாரணைகளின் அடிப்படையில் இன்று நிரபராதியென இனங்காணப்பட்டு நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

புனர்வாழ்வின் பின் யாழ் பல்கலை கழக இசைத்துறை விரிவுரையாளராக பணியாற்றி வந்த கண்ணதாசன், புலிகள் அமைப்பிர்கு பலவந்தமாக ஆள்களைக் கடத்தினார் எனும் குற்றச்சாட்டின் கீழ், பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றில் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கில் அவர் குற்றவாளியாக இனம்காணப்பட்டு 2017ஆம் ஆண்டு அவருக்கு வவுனியா மேல்நீதிமன்றால் ஆயுள்தண்டனை வழங்கப்பட்டிருந்தது. இந்த தண்டனையை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்பட்டது.

அந்த மேன்முறையீட்டு மனு மீது இரண்டு ஆண்டுகளாக விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் 2020 ஜூலை 22ஆம் திகதி அவரது ஆயுள் தண்டனையை ரத்துச் செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், குற்றப்பத்திரிகையை மீள விளக்கத்துக்கு எடுக்க அனுமதியளித்திருந்தது.

இந்நிலையில் அவருக்கு எதிராக குற்ற பத்திரிகையை மீள விளக்கத்துக்கு எடுப்பதற்கு வவுனியா மேல் நீதிமன்றில் மீளவும் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் முன்னிலையில் இன்று அழைக்கப்பட்டது.

வழக்குத் தொடுனர் தரப்பு விண்ணப்பத்தை நிராகரித்த வவுனியா மேல் நீதிமன்று, கண்ணதாசனை விடுதலை செய்ய கட்டளையிட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.